Friday, September 11, 2009

ராகுல் காந்தி சுற்றுப்பயணம் காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?

கோவை செப் 18


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்து தமிழக மக்களின் மன நிலையை அறிந்து சென்றுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக திருச்சி மற்றம் சிவகங்கை வந்த ராகுல் காந்தி, தன்னுடைய தந்தை ராஜீவைப் போன்றே தாமும் தமிழகத்தை நேசிப்பதாகவும் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவேன் என்றும் கூறிச் சென்றார். தன்னுடைய கவனம் முழுவதும் உத்திரப் பிரதேசத்திலேயே இருந்ததாகவும் இனி தமிழகத்தின் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார். கூறியவாறே அவரின் தமிழக சுற்றுப் பயணமும் அமைந்தது.

இந்தியாவிலேயே காங்கிரசுக்கு அதிக கோஷ்டிகள் உள்ள மாநிலம் என்ற பெருமை தமிழகத்திற்கு உண்டு. 5 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவராக நீடித்திருப்பதே பெரும் சாதனை என்ற அளவிலேயே தமிழகத் தலைமை இருந்து வருகிறது. மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, குமரி அனந்தன், திண்டிவனம் இராமமூர்த்தி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இரா. அன்பரசு, ஜி.கே. வாசன், கிருஷ்ணசாமி, கே.வி. தங்கபாலு என கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் தலைவர்களாக நியமனம் பெற்றவுடன் தமக்கு முன் இருந்தவர்களின் விசுவாசிகளை கட்டம் கட்டுவது, தமது ஆதரவாளர்களை வளர்த்து விடுவது என கட்சியைப் பிளவுபடுத்துவதிலேயே குறியாக இருந்து வந்துள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சதவீத ஆதரவு இருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் வயதானவர்களே. தமிழக இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலில் வெறுப்புற்றிருப்பதால் இளைஞர்களிடையே கட்சிக்கு ஆதரவு இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியுடன் இளைஞர் காங்கிரஸையும் தன் பொறுப்பில் வைத்திருக்கும் ராகுல், இளைஞர்களை கட்சியில் இணைப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக சுற்றுப் பயணத்தின்போது கட்சியினரை மட்டுமின்றி, கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடி இருக்கிறார். இந்தக் கூட்டங்களில் அவர் கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் தமிழகத்தின் நிலையை அவர் புரிந்து கொண்டுள்ளதை உறுதி செய்கிறது.

இனி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சித் தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். கிராம கமிட்டி தேர்ந்தெடுத்து அளிக்கும் வேட்பாளர்களையே கட்சித் தலைமை இறுதி செய்யும் என்று கூறியுள்ளார். இது படித்த இளைஞர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலில் மீனவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்த ராகுல், நெல்லையில் பீடித் தொழிலாளர்களையும், தஞ்சையில் விவசாயிகளையும், வேலூர் மற்றும் சென்னையில் மாணவர்களுடன் கலந்துரையாடியதையும் சுட்டிக்காட்டும் அரசியல் நோக்கர்கள், ராகுல் தேர்ந்த அரசியல்வாதியாக ஆகிவிட்டதாகவே கருதுகின்றனர்.

நேரு குடும்பம் மீது தமிழக மக்களுக்கு இருக்கும் அன்பு தற்போது ராகுல் வருகை மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுவதைப் போன்று, அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்ற முறை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம், கூட்டணியின் முக்கியத் தலைவர் என்ற முறையில் முதல்வர் கருணாநிதியை சந்திப்பது என்பது வழக்கமாகி இருந்தது. பல தலைவர்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு போவதைவிட கருணாநிதியை சந்திப்பதை முக்கியமாகக் கருதினார்.

ஆனால் ராகுலோ முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது கூட அக்கட்சிக்கு தேவையில்லாத முக்கியத்துவம் அளித்து, அகில இந்திய அளவில் பத்திரிக்கைகளில் வரும் என்பதை உணர்ந்து தான் சந்திப்பதை தவிர்த்து இருக்கிறார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கணக்கு.

பிற காங்கிரஸ் தலைவர்கள் போல் நாங்கள் ஆட்சியை பிடிப்போம், காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றெல்லாம் பேசாமல், ஏன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காணும் விதமாகத் தான் அவருடைய பேட்டிகள், சுற்றுப் பயணங்கள், செயல்பாடுகள் அமைந்திருந்திருந்தது. இது அவர் கற்று வரும் அரசியல் பக்குவத்தைக் காட்டுகிறது.

ஆக, முக்கியத் தலைவர் தமிழகம் வந்தார் சென்றார் என்றில்லாமல், "இனி அடிக்கடி வருவேன்; எல்லோரும் செயல்படுவோம்" என்ற செய்தியை இச்சுற்றுப் பயணத்தின் மூலம் காங்கிரஸ் கோஷ்டிகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். ராகுலின் நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டது தமிழக முக்கிய அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழக இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைக்க பரவலாக ஆங்காங்கே வித்துகளை ஊன்றிச் சென்றுள்ளார். தொடர்ந்து நீர் பாய்ச்சினால் வளர்ந்து செழிக்க வாய்ப்புண்டு. காங்கிரஸ் தமிழகத்தில் புத்துயிர் பெறுமா? என்பதை அடுத்த சில மாதங்களின் நிகழ்வுகள் நமக்கு உணர்த்திவிடும்.
கோவை தங்கப்பா

No comments:

Post a Comment