Sunday, August 16, 2009

அமீரகத்தில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்








துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்ந்து வரும் 1.5 மில்லியன் இந்திய மக்களால் 62 ஆவது இந்திய சுதந்திர தினம் சனிக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அமீரகத் தலைநகர் அபுதாபி இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் ஆண்கள், பெண்கள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட இந்திய மக்கள், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய ஜனாதிபதியின் சுதந்திர தின உரையினை இந்தியத் தூதர் வாசித்தார்.

துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அலுவலகம் சுதந்திர தினத்தை துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளியில் கொண்டாடியது. இந்திய தேசியக் கொடியினை கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி ஏற்றி வைத்து இந்திய ஜனாதிபதியின் சுதந்திர உரையினை வாசித்தார்.
இதில் இந்திய மக்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிக் குழந்தைகள் தேச பக்திப்பாடல்களைப் பாடினர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அபுதாபி இந்திய சோஷியல் அண்ட் கல்சுரல் செண்டரில் அதன் தலைவர் சுதிர் குமார் செட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.

அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட இந்திய அமைப்புகளான இந்தியன் சோஷியல் செண்டர், இந்தியன் இஸ்லாமிக் செண்டர், இந்தியப் பெண்கள் அமைப்பு, கேரளா சோஷியல் செண்டர், அபுதாபி மலையாளி சமாஜம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமை மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துபாய் இந்திய கன்சல் ஜெனரல் அலுவலகம், இந்தியா கிளப்புடன் இணைந்து சனிக்கிழமை மாலை கஜல் நிகழ்ச்சியினை நடத்தியது.

ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ஃபுஜைரா, ராசல் கைமா, அல் அய்ன், கல்பா உள்ளிட்ட பல்வேறு இந்திய சங்கங்களிலும் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

No comments:

Post a Comment