Thursday, August 6, 2009

ரமளான் மாதத்தின் சிறப்புகள்


) ரமளான் மாதம் வந்துவிட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் ”நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா)

3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ, அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ, அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) நோன்பு மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே, நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹ் பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல் அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டதுதான் ரமளான் மாதமும், இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது, அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. இம்மாதத்தில் அல்லாஹ்வின் அருள் அதிகம் இறங்குகின்றது, இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது, இம்மாதத்தில் அல்லாஹ் பாவங்களை அதிகம் மன்னிக்கின்றான். ”யார் ரமளான் மாதத்தை அடைந்தும் பாவம் மன்னிக்கப்படாமல் மரணித்தானோ அவனை அல்லாஹ் (தன் அருளை விட்டும்) தூரமாக்குவானாக!” என ஜிப்ரயீல் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்ய, நபி (ஸல்) அவர்கள் அதற்கு ஆமீன் கூறினார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வளவு சிறப்புகளை உள்ளடக்கியதுதான் இம்மாதம். ஆகவே, யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ, இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகமதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்கியருள்வானாக!

Thanks இஸ்லாம்கல்வி.காம்

1 comment:

  1. Asslamu Alikkum,
    please explain details tamil type this post a comment wish font and some details
    thanks
    a.haja

    ReplyDelete