Sunday, May 3, 2009
பாஜகவினர் என்னை தவறாக வழிநடத்தினர்-கல்யாண் சிங்
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் என்னை பாஜகவினர் தவறாக வழிநடத்திவிட்டனர் என்று கல்யாண் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா அரசின் முதலமைச்சராக கல்யாண்சிங் இருந்தார்.
தற்போது, அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி, முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்துள்ளார். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்திரப்பிரதேச மாநிலம் இட்டா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், புலந்ஷாகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில், முலாயம் சிங் யாதவும், கல்யாண்சிங்கும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் பேசிய கல்யாண் சிங், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கரசேவை நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதன சின்னமான பாபர் மசூதிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெயர்சொல்ல விரும்பாத 2 பா.ஜனதா தலைவர்கள் என்னை தவறாக வழி நடத்தினார்கள். இதன் காரணமாக தான் பாபர்மசூதி ஏற்கனவே திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் உண்மை நிலையை புரிந்து கொண்ட முஸ்லிம்கள் தற்போது என்னை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment