Sunday, May 3, 2009

முகவையில் முத்தெடுப்பது யார்?





தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி போன்ற வற்றை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், ராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி, மானாமதுரை, அருப்புக் கோட்டை, முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
.
தொகுதி மறுவரையறையில் கடலாடி சட்டமன்ற தொகுதி ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது அந்த தொகுதிக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சுழி தொகுதி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை இந்த மக்களவை தொகுதியிலிருந்து நீக்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல மானாமதுரை தொகுதி விலக்கப்பட்டு, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்டிருந்த திருவாடானை, ராமநாதபுரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த 6 தொகுதிகளும் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 31 ஆயிரத்து 739 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 923 பேர். பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 72 ஆயிரத்து 816 பேர்.
ஆண் வாக்காளர்களை விட சுமார் 24 ஆயிரம் பெண் வாக்காளர்கள் இந்த தொகுதியில் அதிகமாக உள்ளனர்.



வேட்பாளர்களை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகர் ரித்தீஷ் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். பிஜேபி தேசிய செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் பிஜேபியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் சிங்கை ஜின்னா களத்தில் உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சலீமுல்லா கான் போட்டியிடுகிறார். பொதுவாக அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் தற்போது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

பிஜேபி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் இந்த தொகுதியில் போட்டியிடுவது என தேர்தலுக்கு முன்பே முடிவானதால் அவர் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்னதாகவே தனது பிரச்சாரத்தை துவக்கி விட்டார். தொகுதியில் உள்ள கிராமங்கள் பலவற்றிலும் திருநாவுக்கரசர் நேரடியாக சென்று அந்தந்த ஊர் மக்களை சந்தித்து பேசி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால், அவரது பிரச்சாரம் சற்றே தூக்கலாக தொகுதி முழுவதும் காணப்படுகிறது.

நாடறிந்த பிரமுகர் என்பதும், நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் என்பதாலும் திருநாவுக் கரசரின் பிரச்சாரம் மக்களிடையே எடுபடுகிறது. திருநாவுக்கரசரின் சொந்த தொகுதியான அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தற்போது சேர்ந்துள்ள தால் அது திருநாவுக்கரசருக்கு கூடுதல் பலமாக காணப்படுகிறது. வரும் 7-ந் தேதி அத்வானி பிரச்சாரம் செய்யவிருப்பது அக் கட்சியின ரிடையே தெம்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக கட்சியினர் சுற்றி சுழன்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பாமகவுக்கு அதிக அளவு செல்வாக்கு இல்லாத போதிலும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு என வாக்குகள் உள்ளதால் அது அதிமுகவின் பலமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சத்தியமூர்த்தி இந்த தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்றிருப்பதும் அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. ஜெயலலிதா இந்த தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரம் கட்சியி னரிடையே ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதற்கு அடையாளமே இல்லாத நிலையே உள்ளது.

அதிமுகவின் கூட்டணி பலம்,அதன் தலைவர்களின் பிரச்சார பலம் ஓங்கி உள்ள நிலையில் திமுகவுக்கு என பிரச்சாரம் செய்ய பெரிய தலைவர்கள் யாரும் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜே.கே.ரித்தீஷûக்கு சீட் ஒதுக்கப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்ப தாகவும், அதன் காரணமாக பிரச்சாரத் தில் பெரும் சுணக்கமும் மந்த நிலை யும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவின் சிங்கை ஜின்னா தொகுதியில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவார் என தெரிகிறது.
சேது சமுத்திர திட்டம், இலங்கை பிரச்சனை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இந்த தொகுதியின் வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரச்சனைகளாக உள்ளன. தற்போதைய நிலையில் அதிமுகவும், பிஜேபியும் பிரச்சாரத்தில் முந்தியுள்ளன என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment