சென்னை: மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினருக்கும், மனித நேய மக்கள் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே இன்று பெரும் மோதல் மூண்டது. திமுகவினர் சரமரியாக அரிவாள்களால் வெட்டியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். மனித நேய கட்சி வேட்பாளர் ஹைதர் அலியையும் வெட்ட முயன்றனர்.
காவல் நிலையத்திற்குள் ஓடிப் பதுங்கிய மமகவினரும் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்கப்பட்டனர். இதைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
தயாநிதி மாறன் திமுக சார்பிலும், மனித நேய கட்சி சார்பில் ஹைதர் அலியும் மத்திய சென்னையில் போட்டியிடுகின்றனர்.
போட்டியிலிருந்து விலகுமாறு தன்னை தயாநிதி மாறன் தரப்பு கேட்டுக் கொண்டதாக முன்னர் ஹைதர் அலி புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் இன்று மனித நேய மக்கள் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.
திமுகவினர்தான் முதலில் தாக்குதலைத் தொடுத்ததாக கூறப்படுகிறது. சரமாரியான அரிவாள் வெட்டு விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் ஹைதர் அலி தனது கட்சியினரோடு அங்கு வந்தார். அவரையும் வன்முறைக் கும்பல் தாக்க முயன்றது. இதையடுத்து ஹைதர் அலி காவல் நிலையத்திற்குள் புகுந்து தப்பித்தார்.
அவருடன் மமகவினரும் காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். ஆனால் உள்ளேயும் புகுந்த வன்முறைக் கும்பல் காவல் நிலையத்திற்குள்ளேயே வைத்து மனித நேயக் கட்சியினரை வெறித்தனமாக தாக்கியது.
இந்த கண்மூடித்தனமான வன்முறையைப் பார்த்த வாக்காளர்கள் அலறி அடித்துக் கொண்டு தப்பி ஓடினர். போலீஸாரும் பின்னர் வந்து சேர்ந்தனர்.
யாரும் ஓட்டுப் போட வர வேண்டாம், வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று போலீஸார் கூறியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பகுதியே தற்போது போர்க்களம் போலக் காணப்படுகிறது. பதட்டமும், பீதியும் நிலவுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment