Wednesday, April 29, 2009

மனிதநேய மக்கள் கட்சிக்கு “ரெயில் என்ஜின்” சின்னம்:


ஏப்: 28. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரத்தால் தேர்தல் களம் களை கட்டியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், இந்திய தவ்கீத் ஜமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மயிலாடுதுறையில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ்கான், பொள்ளாட்சியில் உமர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமியும், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள 4 வேட்பாளர்களும் தங்களுக்கு ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இதன்படி இவர்கள் அனைவருக்கும் ரெயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.




மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் ஹைதர் அலி நேற்று ரெயில் என்ஜின் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

திருவல்லிக்கேணி பகுதியில் எல்லிஸ்.ரோடு, பைகிராஸ்ரோடு, பெல்ஸ் ரோடு, திருவல்லிக் கேணி நெடஞ்சாலை, அபுல்ஹசன் ரோடு, பார்டர் தோட்டம், பெரிய தெரு, பார்த்தசாரதி ரோடு மற்றும் சேப்பாக்க பகுதிகளிலும் ரெயில் என்ஜின் சின்னத்தை காட்டி ஹைதர்அலி ஓட்டு கேட்டார்.

திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நாசர் உமரி, த.மு.மு.க. பொருளாளர் ரகமதுல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்துல்சலாம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் சீனிமுகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நேற்று காலையில் மட்டும் திருவல்லிக்கேணி பகுதியில் 20 கிறிஸ்தவ பாதிரியார்களை சந்தித்து ஹைதர் அலி ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment