Wednesday, April 15, 2009
சமூக ஜனநாயக முன்னணி உதயம்
மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய தேசிய லீக் ஆகிய 3 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. “சமூக ஜனநாயக முன்னணி” என்ற பெயரில் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக “சமூக ஜனநாயக முன்னணி” என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை- ஜவாஹிருல்லா, மத்திய சென்னை- எஸ்.ஹைதர்அலி, பொள்ளாச்சி-உமர், ராமநாதபுரம்-சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.
புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள்.
கேள்வி:- தி.மு.க., அ.தி. மு.க. போன்ற பெரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு புதிய கூட்டணியை உருவாக்கியது ஏன்?
ஜவாஹிருல்லா பதில்:- தி.மு.க.வுடன் 1995-ம் ஆண்டு முதல் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சிறுபான்மையினரான எங்கள் கட்சி தனி முத்திரை பதித்து விடும் என்று கருதி 1 தொகுதியை கொடுத்து ஓரம் கட்டப்பார்த்தார்கள்.
அதுவும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தி.மு.க. காலம் காலமாக இப்படித்தான் செய்து வருகிறது.
சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. இப்போது தி.மு.க. 21 தொகுதியில் அல்ல 22 தொகுதியில் போட்டியிடுகிறது. காதர்மொய்தீன் முஸ்லிம் லீக் கட்சியும் தி.மு.க. சின்னத்திலேயே நிற்கிறது. அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை.
கேள்வி:- டாக்டர் ராமதாஸ் உங்களிடம் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டாரா?
பதில்:- டாக்டர் ராமதாசுடன் நீண்ட காலமாக பழகியுள்ளேன். அவரது கோட்பாடு எனக்கு பிடிக்கும். அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டார். நான் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினேன்.
கேள்வி:- எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிடுவீர்களா?
பதில்:- 40 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
கேள்வி:- தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவீர்கள்?
பதில்:- நாளை தொடங்குகிறோம்.
கேள்வி:- எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
கிருஷ்ணசாமி பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கை பிரச்சினையை எடுத்து வைப்போம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்பட வில்லை.
கேள்வி:- எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
பதில்:- எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment