முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கவலை
கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்தி முழு அரச வளங்களையும் பயன்படுத்தி வரும் அரசாங்கம் புதிய உத்திகளைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது. தமது பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக முஸ்லிம் பிரதேசங்களில் ஆட்களை பயமுறுத்தி அரசாங்கத்தின் சட்டத்துக்கு முரணான வேலைகளையும் அங்கீகரித்து ஆசீர்வதிக்கும் நிலை உருவாகி வருகிறது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மிரட்டல்களுக்கு ஒரு போதும் அடிபணியாது.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேல் மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு புக்கர் மண்டபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் மு.கா.தவிசாளருமான பசீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி எம்.பி.தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் எம்.பி. உட்பட பலரும் இக் கூட்டத்தில் உரையாற்றினர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;
கடந்த வருடம் இதே தினம் நான் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தபோது என்னுடன் சேர்ந்து இரண்டு பேர் ராஜிநாமா செய்தார்கள். ஏனெனில், அன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் ஒரு சவாலை எதிர்நோக்க வேண்டி இருந்தது.
எமது கட்சியில் இருந்து ஆட்களைப் பிடுங்கி எடுத்து விட்டு, முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தார். இந்த சவால் கடைசி நேரத்தில் வந்த போது நாமும் தைரியமாக முடிவு எடுத்தோம். எமக்கு பாராளுமன்ற ஆசனங்கள் முக்கியமல்ல. இந்த அரசாங்கத்தின் சவாலை முறியடிக்க வேண்டும் என்பதற்காக திருகோணமலையில் போட்டியிட்டு சவால்களை முறியடித்தோம்.
பரந்த மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டி ஒரு தீர்மானத்திற்கு வருகின்ற போது மனதுக்குள் எமக்கு ஒரு திருப்தியும் தைரியமும் வரும். இந்த அரசாங்கத்துக்கு ஒரு சவாலை விடுப்பதற்கு தைரியமான, பதவிகளை கூட தூக்கி எறிந்துவிட்டு வரக்கூடிய, எமக்கு என்றொரு கட்சியும் அதனை சார்ந்த உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்ற உணர்வு மிகப் பிரதானமானது.
கொழும்பு மாவட்டத்தில் நமது கட்சி 1988 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மாகாண சபைத் தேர்தலிலும், மாநகர சபைத் தேர்தல்களிலும் சேர்ந்து போட்டியிட்டதே இல்லை. எனவே, இப்படியான ஒரு முடிவை இந்த மாகாண சபைத் தேர்தல் மாற்றுவதற்கான எந்த நிர்ப்பந்தமும் எமக்கு ஏற்படவில்லை.
எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பிறகு இம்மாகாண சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியிடப்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தனை ஆயிரம் வாக்குகளை பெற்றிருக்கிறது என்பது தான் முஸ்லிம்களின் தன்மானம், சுயகௌரவம் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த சமூகத்தின் ஆத்திரமும், ஆவேசமும் இந்த அரசுக்கெதிராக இதன்மூலம் வெளிப்பட்டிருப்பதை சர்வதேச சமூகம் அறிந்து கொள்ளும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் மிகப் பலமாக இருக்கிறது. நான்கு மாநகர சபை உறுப்பினர்களை வைத்திருக்கிறோம். 2 மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம். ஒரு பாராளுமன்ற உறுப்பினரையும் வைத்திருக்கிறோம்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் பற்றி சர்வதேச ரீதியாக எவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இது குறித்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்தியாவில் நடக்கும் தேர்தலுக்காக இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கான அதிகார பரவலாக்கலுக்கு போராட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அந்தளவுக்கு தமிழ் நாட்டில் அப்படி ஒரு அழுத்தம். இதுவரை 12 பேர் தற்கொலை புரிந்துள்ளார்கள்.
பல தடவைகள் டெல்லிக்கு போயுள்ள நான் அந்தக் கட்சியுடனும், அரசின் மேல் மட்ட உறுப்பினர்களுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். மன்மோகன் சிங் இலங்கை வந்த போது சந்தித்து எமது பிரச்சினை குறித்துப் பேசியிருக்கிறோம். ஆனால், எமது பிரச்சினைகளை இன்னும் கறுப்புக் கண்ணாடியோடு தான் பார்க்கிறார்கள்.
எனவே, முஸ்லிம்களாகிய எமது பிரச்சினை வெறுமனே இலங்கையில் இருந்து மட்டும் தீர்க்கப்படும் பிரச்சினை அல்ல. அது நாட்டு எல்லை கடந்து போன ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது.
அண்மையில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்தோம். சகல தமிழ் கட்சிகளையும் அழைத்திருந்தார்கள். ஜனாதிபதியை சந்திப்பதற்கு முன் பாராளுமன்றத்தில் நான் உரையாற்றியிருந்தேன். அதற்குப் பிறகே சற்று அவசரப்படுத்தி எமக்கான அழைப்பு தொலை நகலில் வந்தது.
"தமிழ் தேசியக் கூட்டமைப்பைக் கூப்பிட்டிருக்கிறீர்கள். சம்பந்தன் எம்.பி.ஒரு மூத்த தமிழ்த் தலைவர். 50 களில் இருந்து தமிழரசுக் கட்சியோடு இருந்த மிக மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் ஒருவரை இந்த அரசின் ஜனாதிபதி அழைத்தது ஜனாதிபதி மாளிகைக்கு அல்ல 4 ஆவது மாடிக்கு வருமாறு சீ.ஐ.டி. அழைத்திருந்தது' என்று நான் விமர்சித்திருந்தேன்.
பயமுறுத்தி அடிபணிய வைக்கிற மாதிரியான இந்த அழைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டிருந்தது. கட்சியை அழைக்கவில்லை. ஆனால், எம்.பி.மாரை அழைக்கிறார்கள்.
இந்த அரசு இன்று வாழ்வதே மற்றைய கட்சிகளின் எம்.பி.மார்களை பிடுங்கியே, ஜனாதிபதியின் கட்சிக்கு சரியாக 56 பேர் மட்டுமே இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கம் தேவை என்றால் ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாம். ஆனால், பயம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது இருக்கிற தொகை இரண்டு மடங்காகிவிடும். முஸ்லிம் காங்கிரஸ் பழைய நிலைக்கு வந்துவிடும் என்ற பயம். எனவேதான், பாராளுமன்ற தேர்தலை நடத்த முன்வரவில்லை.
அடுத்து வரவுள்ள சில ஆண்டுகளில் ஒரு நூற்றாண்டை நினைவு கூற இருக்கிறோம். 2015 ஆம் ஆண்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த பெரிய இனக் கலவரத்தின் நூற்றாண்டு ஆகும். 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான மிகப் பெரிய கலவரம் இந்நாட்டில் நடந்தது. 1956 இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த இந்தக் கலவரத்தின்போது முஸ்லிம்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கலவரத்தின் அடிப்படையே முஸ்லிம்களின் வணிகச் செழிப்பின் மீது கொண்ட பொறாமையாகும். அது இன்று வரை முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
முஸ்லிம்களாகிய எமக்கு இவ்வளவு நடந்தும் நாம் இன்னும் வன்முறைக்குப் போகவில்லை. நாங்கள் இன்னும் ஜனநாயக ரீதியில்தான் போராடி வருகிறோம். இல்லாவிட்டால் எப்போதோ முஸ்லிம்களும் ஆயுதம் தூக்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment