பாகிஸ்தானின் லாகூர் நகரிலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தீவிரவாதிகள் நடத்திய மோசமான தாக்குதலை 7 மணித்தியால முற்றுகையின் பின்னர் பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸ் துணைப்படையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன.
பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் கூரை மீது நின்றவாறு வானத்தை நோக்கி சுட்டு பாதுகாப்பு படையினர் வெற்றி ஆரவாரமிட்டதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.
தாக்குதல் நடத்தியவர்களில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தாக்குதல் நடத்திய ஏனைய 11 பேரினதும் அவர்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்த 35 பேரினதும் நிலைமை தொடர்பாக இன்னமும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் அணிமீது இம்மாத முற்பகுதியில் தாக்குதல் இடம்பெற்ற பாகிஸ்தானின் லாகூர் நகரத்திலுள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தினர்.
இச்சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகளின் கமாண்டோ பாணியிலான இத்தாக்குதலில் கொல்லப்பட்டோரில் 11 பொலிஸ் அதிகாரிகள் அடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டதுடன், இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கும் இதற்கும் இடையில் ஒத்த தன்மைகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரு சம்பவங்களிலுமே நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் துப்பாக்கிகள், கிரனேட்டுகள், ரொக்கட் லோஞ்ஜர்களுடன் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீதான தாக்குதலில் தாக்குதல் நடத்திய சகல தீவிரவாதிகளும் காயமேதும் இல்லாமல் தப்பிச் சென்றுவிட்டனர். ஆனால், நேற்றுத் தாக்குதல் நடத்தியோர் தப்பியோட முயற்சித்ததாக தோன்றவில்லை. பயிற்சிக் கல்லூரியில் தொடர்ந்து உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றுள்ளது.
நேற்று தாக்குதல் நடத்தியோர் 8 இற்கும் 20 இக்கும் இடைப்பட்ட தொகையினர் என்று கூறப்படுகிறது. அதிகளவு ஆயுதங்களுடன் அவர்கள் வந்து மோதியதாகவும் சிலர் பொலிஸ் சீருடையில் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சிக் கல்லூரிக்குள் தீவிரவாதிகள் இருந்தபோது இராணுவமும் பொலிஸாரும் அங்கு வந்து முற்றுகையிட்டிருப்பதாகவும் பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் ராசீர் நேற்றுப்பகல் தெரிவித்துள்ளார். பொலிஸாரும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளை அங்கு நிறுத்தியிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மஸ்தாக்சீ சுக்ஜேரா கூறியுள்ளார்.
பொலிஸ் படையணிக்கு சேர்க்கப்பட்டோருக்கு காலை 8.50 மணிவரை காலைப் பயிற்சி அளிக்கப்படுவது அங்கு வழமையாகும். அந்த நேரத்தில் காலை 7.20 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.
10,12 பயங்கரவாதிகள் காணப்பட்டனர். அவர்களில் அரைவாசிபேர் பொலிஸ் சீருடை அணிந்திருந்தனர். மற்றவர்கள் விளையாட்டு நேரத்தில் அணியும் உடையுடன் காணப்பட்டனர். தோல்களில் பைகளை வைத்திருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி அம்ஜாத் அகமட் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் இரு அணிகளாக அணிவகுப்பு இடம்பெறும் மைதானத்திற்கு வந்ததாகவும் காலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை துப்பாக்கிதாரிகள் நான்கு முனைகளில் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவ இடத்திலிருந்த பொலிஸ் அதிகாரி "த ரைம்ஸ்' செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.
முதலில் அவருக்கு மேலாக கிரேனெட் ஒன்று வந்து வீழ்ந்தது. பின்னர் ஏழு அல்லது எட்டுப் பேர் உட்புறமாக வந்து கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர் என்று இத்தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பயிற்சி பொலிஸ்காரர் ஒருவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment