Thursday, March 26, 2009

சிங்கப்பூரில் 45,000 புதிய வேலைகள்

சிங்கப்பூரில் 45,000 புதிய வேலைகள் (Tue, 24/03/2009)


சிங்கப்பூரில் இந்தியர்கள் உட்பட இன்னும் பலருக்கு வேலைகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பொருளியல் மந்தநிலை உள்ளூர் வேலை வாய்ப்புச் சந்தையை அலைக் கழிக்கிறது என்றாலும் தொழில் சந்தையில் இன்னும் நம்பிக்கை தரும் துறைகள் இருக்கவே செய்கின்றன.
வேலை இழப்புகள் பற்றி உறுப்பினர் ஐரீன் இங் கேட்ட கேள்விக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த இடைக்கால மனிதவள அமைச்சர் கான் கிம் யோங், கட்டுமானம், மருந்தியல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, பொது நிர்வாகம், பயணத்துறை ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றார் அமைச்சர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 45,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரில் அமையவிருக்கும் இரு ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்களில் 20,000, பொதுத் துறையில் 18,000, தூய்மை தொழில்நுட்பத் துறையில் 1,200, உயிர்மருத்துவத்தில் 900 என்று பல வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்,” என்று திரு கான் சொன்னார்.
இவற்றில் பெரும் பாலான வேலைகள் நிபுணர்கள், நிர்வாகிகள், மேலதிகாரிகள், தொழில் நுட்பர்கள் ஆகியோருக்கான வேலைகள் என்றாலும், சில்லறை விற்பனை, உணவு பானம், கட்டுமானம், உபசரிப்பு, பாதுகாப்பு, குழந்தைப் பராமரிப்பு, இருவழி மின்னிலக்க தகவல் சாதனம் போன்ற துறைகளிலும் புதிய வேலைகள் உருவாகும் என்றார்.
நாட்டில் தற்போது நிலவும் வேலையில்லா விகிதம் பற்றிய ஆகக்கடைசி விவரத்தையும் அமைச்சர் கான் நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
தொடர்ந்து நான்கு காலாண்டுகளுக்கு வேலையில்லா விகிதம் அதிகரித்து வந்துள்ளதை சுட்டிய அவர், 2008ம் ஆண்டு செப்டம்பரில் 3.3 ஆக இருந்த விகிதம், 2008ம் ஆண்டு டிசம்பரில் 3.7 ஆக உயர்ந்தது என்றார்.
அந்த மாதத்தில் சுமார் 69,900 குடியிருப்பாளர்கள் வேலை இன்றி இருந்தார்கள் என்று கூறிய அமைச்சர், மனிதவள அமைச்சு, ஊழியரணி மேம்பாட்டு வாரியம், சமூக மேம்பாட்டு மன்றத்துடன் இணைந்து வேலை இழந்தவர்களுக்கு மறுவேலை தேடித் தர உதவி வருகிறது என்றார்.

No comments:

Post a Comment