Sunday, May 3, 2009

தேர்தல் அறிக்கை குறித்து ஜவஹிருல்லாஹ் கூறியது...


மத்திய, மாநில அளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான பட்டியல் சரி செய்யப்பட வலியுறுத்தப்படும். நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை உடனடியாக லோக்சபாவில் தாக்கல் செய்வதற்கும், அதன் பரிந்துரைப்படி சிறுப்பான்மையினருக்கான 15 சதவீதம் ஒதுக்கீடும், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கென 10 சதவீதம் ஒதுக்கீடு முழு அளவில் அமல்படுத்த ஆவண செய்வோம்.பொதுத்துறை வேலை வாய்ப்பு, உயர்கல்வி, சமூக முன்னேற்றத்துக்கான நலன் ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்துவோம். மத்திய, மாநில அரசு திட்டங்களில் ,முஸ்லீம்களுக்கு துணைத் திட்டங்களை ஏற்படுத்தவும் அத்தகைய துணைத் திட்டங்களுக்கு தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதற்கு சமமான நிதியை ஒதுக்க வேண்டும்.


சிறுபான்மையினர் பெருவாரியாக வசிக்கும் இடங்களில் பள்ளி கூடம் அமைக்க 20 சதவீதம் சர்வ சிக்ஷா அபியான் நிதியை ஒதுக்கீடு செய்யவும், முஸ்லீம் சமூகம் கல்வியில் பின் தங்கியிருப்பதை முடிவுக்கு கொண்டு வரவும் வலியுறுத்துவோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு செலவிடப்பட வலியுறுத்துவோம்.அனைத்து மாநில பாடநூல்களில் இருந்தும் வகுப்பு வாதத்தைத் தூண்டும் கருத்துகளை நீக்கி மாணவர்களிடையே மதச்சார்பற்ற மனித நேய கொள்கைகளை வளர்க்கும் வகையில் பாடத்திட்டங்களை வகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் வரை சமூகநீதி பேணப்பட வேண்டும்மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் பெயரில் கொண்டு வரும் கொடுஞ்சட்டங்களை ரத்து செய்ய ஆவன செய்வோம்.மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாட்சி ஆகிய நான்கு தொகுதிகளிலும் ரயில் இன்ஜின் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்கு வாக்காளர் ஓட்டளித்து அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ஜவஹிருல்லா கூறினார்.


பேட்டியின் போது, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலர் தமீம்அன்சாரி, அமைப்பு செயலர் ஜெய்னுலாபுதீன், மாநில துணைச் செயலர் ஹாஜாகனி உட்பட பலர் உடனிருந்தனர்.

பாஜக‌வின‌ர் எ‌ன்னை தவறாக வ‌ழிநட‌த்‌தின‌ர்-க‌ல்யா‌ண் ‌சி‌ங்



பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு ‌விவகார‌த்‌தி‌ல் எ‌ன்னை பாஜக‌வின‌ர் தவறாக வ‌ழிநட‌த்‌தி‌வி‌ட்டன‌ர் எ‌ன்று க‌ல்யாண‌் ‌சி‌ங் கு‌ற்ற‌ம்சா‌ட்டியு‌ள்ளா‌ர்.

கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா அரசின் முதலமை‌ச்சராக கல்யாண்சிங் இருந்தார்.

தற்போது, அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி, முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி‌யி‌ல் சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர். ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் சமா‌ஜ்வாடி க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் உ‌த்‌திர‌ப்‌பிரதேச மா‌நில‌ம் இ‌ட்டா தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், பு‌ல‌ந்ஷாக‌ரி‌ல் நடைபெ‌ற்ற ‌பிர‌ச்சார பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல், முலாயம் சிங் யாதவு‌ம், கல்யாண்சிங்கும் கலந்து கொண்டு பேசினர்.

கூ‌ட்டத‌்‌‌தி‌ல் பே‌சிய க‌ல்யா‌ண் ‌சி‌ங், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட கரசேவை நடத்த போவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதன சின்னமான பாபர் மசூதிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெயர்சொல்ல விரும்பாத 2 பா.ஜனதா தலைவர்கள் என்னை தவறாக வழி நடத்தினார்கள். இதன் காரணமாக தான் பாபர்மசூதி ஏற்கனவே திட்டமிட்டபடி இடிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் உண்மை நிலையை புரிந்து கொண்ட முஸ்லிம்கள் தற்போது என்னை ஏற்றுக்கொண்டு விட்டன‌‌ர் எ‌ன்று கூ‌றினா‌ர்

முகவையில் முத்தெடுப்பது யார்?





தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களான ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்புல்லாணி போன்ற வற்றை உள்ளடக்கிய ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில், ராமநாதபுரம், பரமக்குடி, கடலாடி, மானாமதுரை, அருப்புக் கோட்டை, முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன.
.
தொகுதி மறுவரையறையில் கடலாடி சட்டமன்ற தொகுதி ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது அந்த தொகுதிக்கு பதிலாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட திருச்சுழி தொகுதி ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அருப்புக்கோட்டை இந்த மக்களவை தொகுதியிலிருந்து நீக்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல மானாமதுரை தொகுதி விலக்கப்பட்டு, சிவகங்கை தொகுதிக்கு உட்பட்டிருந்த திருவாடானை, ராமநாதபுரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த 6 தொகுதிகளும் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 31 ஆயிரத்து 739 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 923 பேர். பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 72 ஆயிரத்து 816 பேர்.
ஆண் வாக்காளர்களை விட சுமார் 24 ஆயிரம் பெண் வாக்காளர்கள் இந்த தொகுதியில் அதிகமாக உள்ளனர்.



வேட்பாளர்களை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகர் ரித்தீஷ் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். பிஜேபி தேசிய செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சு.திருநாவுக்கரசர் பிஜேபியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேமுதிக சார்பில் சிங்கை ஜின்னா களத்தில் உள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சலீமுல்லா கான் போட்டியிடுகிறார். பொதுவாக அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் தற்போது பிஜேபிக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

பிஜேபி வேட்பாளர் சு.திருநாவுக்கரசர் இந்த தொகுதியில் போட்டியிடுவது என தேர்தலுக்கு முன்பே முடிவானதால் அவர் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்னதாகவே தனது பிரச்சாரத்தை துவக்கி விட்டார். தொகுதியில் உள்ள கிராமங்கள் பலவற்றிலும் திருநாவுக்கரசர் நேரடியாக சென்று அந்தந்த ஊர் மக்களை சந்தித்து பேசி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால், அவரது பிரச்சாரம் சற்றே தூக்கலாக தொகுதி முழுவதும் காணப்படுகிறது.

நாடறிந்த பிரமுகர் என்பதும், நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல் என்பதாலும் திருநாவுக் கரசரின் பிரச்சாரம் மக்களிடையே எடுபடுகிறது. திருநாவுக்கரசரின் சொந்த தொகுதியான அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தற்போது சேர்ந்துள்ள தால் அது திருநாவுக்கரசருக்கு கூடுதல் பலமாக காணப்படுகிறது. வரும் 7-ந் தேதி அத்வானி பிரச்சாரம் செய்யவிருப்பது அக் கட்சியின ரிடையே தெம்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்திக்கு ஆதரவாக கட்சியினர் சுற்றி சுழன்று வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பாமகவுக்கு அதிக அளவு செல்வாக்கு இல்லாத போதிலும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு என வாக்குகள் உள்ளதால் அது அதிமுகவின் பலமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சத்தியமூர்த்தி இந்த தொகுதியில் ஒருமுறை வெற்றி பெற்றிருப்பதும் அவருக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. ஜெயலலிதா இந்த தொகுதியில் மேற்கொண்ட பிரச்சாரம் கட்சியி னரிடையே ஊக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதற்கு அடையாளமே இல்லாத நிலையே உள்ளது.

அதிமுகவின் கூட்டணி பலம்,அதன் தலைவர்களின் பிரச்சார பலம் ஓங்கி உள்ள நிலையில் திமுகவுக்கு என பிரச்சாரம் செய்ய பெரிய தலைவர்கள் யாரும் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஜே.கே.ரித்தீஷûக்கு சீட் ஒதுக்கப்பட்டதில் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்ப தாகவும், அதன் காரணமாக பிரச்சாரத் தில் பெரும் சுணக்கமும் மந்த நிலை யும் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவின் சிங்கை ஜின்னா தொகுதியில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவார் என தெரிகிறது.
சேது சமுத்திர திட்டம், இலங்கை பிரச்சனை, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மீனவர்கள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இந்த தொகுதியின் வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பிரச்சனைகளாக உள்ளன. தற்போதைய நிலையில் அதிமுகவும், பிஜேபியும் பிரச்சாரத்தில் முந்தியுள்ளன என்றால் அது மிகையாகாது.

Friday, May 1, 2009

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்-நக்கீரன் நேர்காணல்


இன்றைய தமிழக அரசிய லில் வெகுஜன மக்களின் உணர்வு களை பிரதிபலிப்பதாக இல்லை. அதனால் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கவே “மனிதநேய மக்கள் கட்சி’ தோற்று விக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக 1995-ல் துவக்கப்பட்ட த.மு.மு.க.வின் அர சியல் பிரிவாக “மனிதநேய மக்கள் கட்சி’யை உருவாக்கியிருக்கிறோம்.

த.மு.மு.க.வின் முழு முகவரி முஸ்லிம் சமூகத்திற்கானது என் றாலும் ம.ம.க.வை அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. ம.ம.க.வை முஸ் லிம்களுக்காக மட்டுமல்ல… சிறுபான்மை யினர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், பிற் படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என அனைத்து சமூக மக்களுக்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் கட்சியாக வார்த்தெடுக்கவிருக்கிறோம். அதனால்தான் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொறுப்புகளிலும் அனைத்து சமூக மக்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த வகையில், முஸ்லிம்களின் பின்னணியில் இக்கட்சி உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைத்து மக்களுக்கான அரசியல்தளமாக ம.ம.க.வை விரிவுபடுத்துவதே முதல் நோக்கம்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்ததாகவே இருந்தது. பின்னாளில் தேசிய லீக் கட்சியையும் சார்ந்ததாக மாறிப்போனது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்கிற முயற்சி எடுத்தவர் காயிதே மில்லத். இதற்காக 1967 சட்டமன்றத் தேர்தலின்போது பிராமண எதிர்ப்பாளராக இருந்த பேரறிஞர் அண்ணாவையும் பிராமணரான ராஜாஜியையும் ஓர் அணியில் கொண்டுவர மிகப்பெரிய கிரியா வூக்கியாக இருந்தவர் காயிதேமில்லத். இந்த அணி வெற்றிபெற தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

இந்த வலிமைக்கேற்ப தி.மு.க. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. அதன்பிறகு, முஸ்லிம் சமூகத்தின் மீது திராவிட கட்சிகள் சவாரி செய்வதில்தான் அக்கறை காட்டியதே தவிர முஸ்லிம் மக்களுக்கா அரசியல் அதிகாரத்தை தருவதற்கு விரும்பவில்லை. அதே மாதிரி திராவிட கட்சிகளின் இந்த கொள்கைக்கு ஆட்பட்டதுபோல முஸ்லிம் சமூக தலைவர் களும்கூட ஒரு சார்பு அரசியலையே தூக்கிப்பிடித்தனர். இதில் சுகம் கண்டன திராவிட கட்சிகள். இந்த சுகத்தினை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் கட்சி களை பலகீனப்படுத்துவதில் முனைப்பு காட்டின. காயிதேமில்லத் மறைவிற்குப் பிறகு திராவிட கட்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆம்… தனி சின்னத்தில் நின்று தனது அடையாளத்தை இழந்துவிடாமல் பாது காத்து வந்த முஸ்லிம் லீக், திராவிட கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றிபெற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வந்தது. அதேசமயம், 10-க்கும் குறையாத சீட்டுகளை பெற்றுவந்த முஸ்லிம் கட்சிகள், 1 சீட் பெறுவதே தங்களுக்கான லட்சியம் என்பதுபோல தேய்ந்துவிட்டன. இதனால், அரசியலில் தங்களின் சுய முகவரியை இழக்க நேரிட்டது. அந்த சுய முகவரியை இன்றளவும் திராவிட கட்சிகளிடமிருந்து முஸ்லிம் கட்சிகளால் மீட்க முடியவில்லை. இதனால், வலிமையான சட்டங்களை இயற்ற வைக்கும் ஆற்றலையும் இழந்து நின்றது முஸ்லிம் சமூகம். உதாரணமாக… கடந்த காலங்களில் லீக்கிற்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை எப்போதோ பெற்றிருக்க முடியும். 1976-லேயே இந்த தனி இடஒதுக்கீட்டை கேரளாவில் பெற்றது லீக். காரணம் அங்கு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டதுதான். தனிச்சின்னத்தில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் லீக் அங்கு இருப்பதால்தான் இதனை சாதிக்க முடிந்தது.



ஆனால், தமிழகத்தில்…? திராவிட கட்சிகளைச் சார்ந் தே நிற்கவேண்டிய சூழலை ஏற்றுக்கொண்டதால் வலிமையை இழந்தனர். கோரிக் கைகளையும் வலிமை யாக வலியுறுத்த முடியவில்லை. இந்தச் சூழலில்தான் 1995-ல் த.மு. மு.க.வை உருவாக்கினோம். மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தினோம். எங்களின் ஆரோக் கியமான கொள்கை வழித்தடங்களை ஏற்று முழுமையாக எங்கள் பக்கம் திரண்டனர் மக்கள். இடஒதுக்கீடு கோரிக்கைக்காக மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொடர் மாநாடுகள், போராட்டங்கள், சாலை மறியல்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் என த.மு.மு.க.வின் சமூகப்பணி வலிமை அடைந்தது.

இந்த வலிமையைக் கண்டு பிரதான தமிழக அரசியல் கட்சிகள் உற்று நோக்கின. தி.மு.க. அரசுக்கு ஆதரவு தரவேண்டுமானால் கோரிக்கை பற்றிய கெடு விதித்தோம். த.மு.மு.க.வின் சக்தியை உணர்ந்து முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை தர முன்வந்து அறிவித்தார் கலைஞர்.

த.மு.மு.க. துவக்கப்பட்ட இந்த 14 வருடத்தில், முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடியதுபோல, சமூக மக்களின் அனைத்துப் பிரச்சனை களுக்காகவும் போராடியிருக்கிறோம். இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் நாங்கள் பெற முடிந் திருக்கிறது.

இந்த வலிமையைக் கொண்டுதான் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, அனைத் துத் தரப்பு மக்களின் அரசியல் அதி காரங்களையும் வென்றெடுப்பதற்காக தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளோம். அரசியல்தளத்தில் நாங்கள் எதை சாதித்தோம் என கேட்டால் இரண்டு மாதமே ஆன கட்சியால் (ம.ம.க.) எந்த பதிலும் கூற முடியாது. ஆனால், எங்கள் கட்சியின் இன்றைய உறுப்பினர்கள் 1995 முதல் மக்கள் சேவையாற்றி வருபவர்கள் என்பதை மறந்துவிட க்கூடாது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி 40 இடங்களில் வெற்றிபெற த.மு.மு.க.வின் பங்களிப்பு மிகப்பெரியது. அதேபோல 2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அணியும் அ.தி.மு.க. அணியும் சம அளவில் மோதின. ஏராளமான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றிபெற முடிந்ததற்கு எங்கள் கட்சியின் இன் றைய உறுப்பினர்கள் போர்க்கால உழைப்பு தான் காரணம் என்பதை ஊர் அறியும். அது கோபால புரத்துக்கும் புரியும்.

சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு எட்டாக்கனியாய் இருந்த போது, அடுக்கடுக்கான போராட்ட வடிவங்கள் மூலம் அதை தமிழகத்தில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

சுனாமிப் பேரலை தமிழகத்தைத் தாக்கியபோது, எமது கட்சியின் இன்றைய உறுப்பினர்கள்தான் மனித நேயத்தோடு சேவையாற்றினார்கள். அதிகாரிகள் யோசித்தபோதும் அழுகிய உடல்களைத் தூக்க ராணுவம் யோசித்தபோதும் எமது உறுப்பினர்கள்தான் பிணங்களை, சாதி மத பேதமின்றி மார்பில் அணைத்து தூக்கி அடக்கம் செய்தனர்.

தமிழகத்தில் எமது உறுப்பினர்கள்தான் அதிகமான அளவில் ரத்ததான சேவைகளை அன்றாடம் வழங்குகிறார்கள். அனைத்துத்தரப்பு மக்களுக்காக, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழகம் முழுவதும் நடத்திவருவது நாங்கள் மட்டுமே! இப்படி மக்கள் நலன் சார்ந்த பணிகளை நிறைய பட்டியலிட முடியும்.

மக்கள்நல சேவையில் ம.ம.க.வினரின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் ம.ம.க.வின் வலிமை என்பது முஸ்லிம் சமூகத்தின் “வோட் பேங்க்’கை வைத்துதான் இருக்கிறது. அந்த வகையில், தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் பேர் முஸ்லிம்கள். மத்திய சென்னை, மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம், திருச்சி, பொள்ளாச்சி, தஞ்சை, அரக்கோணம், ஆரணி, தென்காசி ஆகிய 10 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்தான். முஸ்லிம் மக்களின் ஆதரவு 99 சதவீதம் எங்கள் பக்கம் இருப்பதை உணர்ந்துதான் குட்டி குட்டி முஸ்லிம் அமைப்புகளையெல்லாம்கூட தங்களுக்கு ஆதரவு தரச்சொல்லி அறிவாலயம் இழுத்துக்கொண்டு வருகிறது.

முதலில் 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஜெயலலிதாகூட, மத்திய சென்னையில் ம.ம.க. வேட்பாளராக ஹைதர்அலி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டதும் முஸ்லிம் சமூக ஆதரவு நமக்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் வேட் பாளரையே மாற்றினார். இவையெல்லாமே ம.ம.க.வுக்கு ஆதரவான மனநிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார் கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.

ம.ம.க.வின் அரசியல் பணிகளில்

-தனிநபர் துதி பாடல் களும் கட்அவுட் கலாச்சாரங்களும் மலிந்து கிடக்கும் தமிழக அரசியலில் மாற்று அரசியலை முன்னிறுத்துவது முதன்மையான பணி. தலைவர்களை வளைய வந்தால் பதவிகள் கிடைக்கும், பணத்தை அள்ளி வீசினால் வேட் பாளராகிவிடலாம் என்பது இன்றைய அரசியலின் சாபக்கேடு. எல்லா தொண்டர்களும் தலைவர்கள், தலை வர்கள் எல்லாம் தொண்டர்கள் என்ற சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இன்றைய ஆடம்பர அரசியல் ஏழைகளை, ஏழ்மையில் வாடும் அறிவுஜீவிகளை ஒதுக்கி வைத் திருக்கிறது. அரசியல் பாரம்பரியம், மீடியா வெளிச்சம், பணபலம், ஜால்ரா கொள்கை இவற்றில் ஏதாவது ஒரு தகுதி இருப்பவர்கள்தான் அரசியலில் மேன்மையடைய முடியும் என்ற சூழல் வளர்ந்திருக்கிறது. அதைத் தகர்க்கும் பணியை தொடங்கியிருக்கிறோம். பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக அறிவு, களப்பணி ஆர்வம்கொண்ட சாமானியர்களும் அரசியலில் உயர் பொறுப்புகள் பெறும் வகையில் எங்களது அரசியலை அமைத்திருக் கிறோம்.

கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியே செலவு செய்யும் என்பதை கொள்கையாக அறிவித்து அதனை அமல்படுத்தியிருப்பதும் நாங்கள்தான்.

இத்தகைய சிந்தனைகளும் அணுகுமுறைகளும்தான் எம்மை வெகு மக்கள் இயக்கமாக, எளிய மக்களின் தாய்வீடாக மாற்றியிருக்கிறது. ஆக வெகுமக்களின் உணர்வுகளையே பிரதிபலிக்கும் அரசியல் இயக்கமாக மாற்று அரசியலை முன்னிறுத்தி முதல் அடியை இந்தத் தேர்தல் மூலம் எடுத்து வைத்திருக்கிறோம். ஆரோக்கியமான அரசியலை வென்றெடுப்பதில் நிச்சயம் சாதிப்போம். தேர்தலின் முடிவுகள் மூலம் எமது மக்கள் இதனை நிரூபிப் பார்கள்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரகுமானுக்கு தொகுதி முழுவதும் வரவேற்பு


வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரகுமான் தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அவர் செல்லும் இடங்களிலெல்லாம் வாக்காளர்கள் மிகுந்த எழுச்சியுடன் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தர இருக்கிறார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையி லான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது.
அத்தொகுதியில் போட் டியிடும் எம். அப்துல் ரகுமான் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாட்றாம்பள்ளி ஒன்றியத்திலும், 27ம் தேதி திங்கள் கிழமை ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம், பேரூர், பேர்ணாம்பட்டு ஒன்றியம் ஆகிய இடங்களிலும் வாக்கு சேகரித்தார்.

அன்று இரவு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் தி.மு.க பொருளாளரும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

மத்திய மாநில அரசுகள் இதுவரை செய்துள்ள சாதனைகளையும் அ.இ.அ. தி.மு.க. கூட்டணி இலங்கை தமிழர் பிரச்சி னையில் நடத்துகின்ற நாடகத்தையும் சுட்டிக் காட்டி உரையாற்றிய மு.க.ஸ்டாலின் அப்துல் ரகுமானை வெற்றி பெற செய்யுமாறு வாக்காள பெருமக்களை கேட்டுக் கொண்டார். 28ம் தேதி வேலூர் நகர் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வேட்பாளர் அப்துல் ரகுமான் வாக்கு சேகரித்தார். பொது மக்கள் இல்லங்களிலிருந்து வெளி யில் வந்து மிகுந்த உற்சாகத் துடன் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவருடன் வேலூர் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் முஹம்மது சகி, மேயர் கார்த்திகேயன், துணை மேயர் சாதிக், நகரச் செயலாளர் ராமலிங்கம், நகர அவைத் தலைவர் விஜய சங்கர், பொருளாளர் சந்துரு, காங்கிரஸ் கட்சி யின் சந்திர பிரகாஷ், சீனி வாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்.
வேலூர் கிழக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கே.எல். முஹம் மது ஹனீப், செயலாளர் கே. சான் பாஷா, பொருளா ளர் அப்துல் அஜீஸ். வேலூர் மாநகர முஸ்லிம் லீக் தலைவர் அய்யூப் பாஷா, செயலாளர் குல்சார், பொருளாளர் பாபு மற்றும் மாமன்ற முஸ்லிம் லீக் உறுப்பினர் கள், நிர்வாகிகள், இளஞர் அணி, மாணவர் அணியின் பொருப்பாளர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

துரைமுருகன் தலைமையில் கே.வி. குப்பத்தில் வாக்கு சேகரிப்பு
29ம் தேதி புதன் கிழமை கே.வி.குப்பம் தொகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் உடன் சென்று தொகுதி முழுவதும் அவ ருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

30.4.09 குடியாத்தம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். மே 1ம் தேதி வேலூர் ஒன்றியத்திலும், 2ம் தேதி ஆலங்காயம் ஒன்றியத்திலும் பேரூர் பகுதியிலும், 3ம் தேதி திருப்பத்தூர் ஒன்றியத்திலும், 4ம் தேதி மாதனூர் ஒன்றியத்திலும், 5ம் தேதி அணைக் கட்டு ஒன்றியத்திலும், 6ம் தேதி ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பேரூர், கணியம்பாடி பகுதியிலும் வாக்கு சேகரிக்கிறார்.

5 மற்றும் 6 தேதிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ. அஹமது வேலூர் தொகுதிக்கு வருகை தந்து அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.